Thursday, August 3, 2017

பிக் பாஸ் தமிழ் (ஓவியா மற்றும் பலர்)

பிக் பாஸ்

மக்களின் பிரதிநிதி - கமல்
ஆண்கள் - சினேகன், சக்தி, ஆரவ், கணேஷ், வையாபுரி
பெண்கள் - காயத்ரி, ஜூலி, ரைசா, ஓவியா, பிந்து மாதவி

முன் குறிப்பு 1: பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்காதவர்கள், பிடிக்காதவர்கள் இதற்கு மேலே படிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு பார்க்க ஆரம்பித்தால் என்னை கேட்கக்கூடாது. விடாது கருப்பு போல என்னை பிடித்துக்கொண்டு விட்டது. நீங்கள் அப்படியே பார்க்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. அதற்கு மேல் உங்கள் இஷ்டம்.

முன் குறிப்பு 2: இந்த நிகழ்ச்சியை ஒரு வார இறுதி நாளில் கமல் என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தேன். அவரை விட இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளரான ஓவியா மிகவும் பிடித்து விட்டதால் அவருக்காக பார்க்கிறேன். ஆனா இப்போ இந்த பிக் பாஸ் ஏற்கனவே பைத்தியங்கள் போல இருக்கும் எல்லாரையும் (ஓவியா தவிர்த்து) பைத்தியங்களாகவே நடிக்க சொல்லி இருக்கிறார். நிஜமாகவே அவர்கள் பைத்தியம்  போலவே இருந்ததால் அவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்பதே கண்டுபிடிக்க முடியாத அளவு நடிப்பு.  ஒரு 5 நாள் பார்ப்பதை நிறுத்தி விடலாமா என்று பார்க்கிறேன்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது என்ன? போட்டியாளர்கள் (பங்கேற்பாளர்கள்) எல்லாரும் சேர்ந்து ஒரு வீட்டுக்குள்ள 100 நாள் இருக்கணும். அப்பப்போ பிக் பாஸ் ஏதாவது ஒரு விளையாட்டு சொல்லுவாரு. அது எல்லாமே நம்ம பள்ளிக்கூடத்துல சின்ன பசங்களுக்கு சொல்வாங்களே - சாக்கு மூட்டைக்குள்ள காலை விட்டுட்டு ஓடி வரணும், ஸ்பூனை வாயில வச்சு அதுல ஒரு எலுமிச்சம் பழத்தை வச்சுட்டே ஓடணும் இந்த மாதிரி. வாரம் ஒருவரை அவங்களே தலைவரா தேர்ந்தெடுக்கணும். வாரத்துக்கு ரெண்டு பேரை நாமினேட் பண்ணனும். அதிகமா யார் பெயர் சொல்லப்படுதோ அவங்களை மக்களின் வாக்கெடுப்பு அப்புறம் வெளியேற்றுவாங்க. கமல் மக்களின் பிரதிநிதியா வாரா வாரம் இவர்களிடம் பேசுவார். 100 நாள் கழித்து ஒருவரை வெற்றிபெற்றவராக அறிவிப்பார்கள். இதுக்கு எப்படி ஆட்கள் தேர்ந்தெடுத்தாங்கன்னு தெரியல. நிறைய பேருக்கு தமிழே தெரியல ஆனா தமிழில்தான் பேசணும் அப்படின்னு விதி. அவங்க தமிழை கடிச்சு முழுங்குறாங்க, குதறித் துப்புறாங்க. பரவாயில்ல விட்டுடுவோம். இதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி நடந்துக்குறாங்க. அது மட்டும் இல்லை நாட்டு நடப்பு, அவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், விளையாட்டு, கிரிக்கெட், சினிமா (அவர்களின் துறை), அரசியல் எதுவுமே பேசுவதில்லை. அல்லது பேசுவதை காட்டுவதில்லை. இவர்களின் முழு நேர வேலையே 8 மணிக்கு எந்திரிப்பது, சாப்பிடுவது, அடுத்தவரைப்பற்றி வண்டி வண்டியாக குறை பேசுவது, போட்டு கொடுப்பது, ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிது படுத்துவது, தூங்குவது இவ்ளவுதான்.

சினேகன் - கவிஞர் - தேவதைகளின் காதலர் - மனிதருக்கு கவிதை எழுத வருகிறதோ இல்லையோ நன்றாக கட்டிபிடடிக்க வருகிறது. ஆனால் இவர் நன்றாக சமைக்கிறார் என்கிறார்கள். தினமும் இவர்களே சமைத்து சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதனால் இவர் கடைசி வரை இருப்பார். இவரோட அடுத்த திறமை என்னன்னா எல்லாரைப்பற்றியும் அவர்கள் முகத்துக்கு நேராக நன்றாகவே பேசுவார். ஆனா அவங்க அந்தப்பக்கம் நகர்ந்த பின் அவர்களைப்பற்றி குறை சொல்லுவார். ஒருநாள் மழை பெய்துகொண்டு இருக்கிறது. ஓவியா மழையில் நனைந்து உற்சாகமாக இருக்கிறார். அந்தப்பக்கம் வந்த சினேகனை வாங்க மழையில் நனையலாம் என்று அழைக்கிறார். அதற்கு சினேகன் நான் காலையிலேயே குளிச்சுட்டேன் என்கிறார். இதற்கு சாரு நிவேதிதா "மழையில் நனைய ஓவியா போன்ற ஒரு பெண் அழைக்கும்போது மழையையும், அவளையும் மறுக்கும் இவரெல்லாம் ஒரு கவிஞரா" என்று கேட்டு எழுதி இருந்தார். ஓவியா பற்றி ஒரு கவிதையும், புத்தகங்கள் மனிதர்களை ஒப்புமைப்படுத்தி ஒரு கவிதையும் சொன்னார். பரவாயில்லை ரகம். ஆனா மற்றவர்கள் சொல்வது போல நன்றாகவே சமையல் வரும் என்றால் கவிதையை விட சமையல் துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு. பிக் பாஸ் இவருக்கு பெண் வேடமாகவே கொடுக்கிறார். ஆனா நமக்குத்தான் சகிக்கல.

சக்தி - புறம் பேசுவதில் அடுத்த லெவல். ஆனா தான் நேர்மையாகவே நடந்துகொள்வதாகவும், தனக்கு ஊருக்குள் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும் நினைத்துக்கொண்டிருப்பவர். ஒரு போட்டியில் வைரம் திருடுபவராக பிக் பாஸ் நடிக்கச் சொல்ல நடித்து முடித்து, திருடியும் விட்டு job done என்று பழைய படங்களில் நம்பியாருக்கு கூடவே இருக்கும் அடியாள் போல சொன்னார். அதற்குப்பிறகு கூட இருப்பவர்கள் எல்லாம் திருடன் என்று சொன்னவுடன் கேவி கேவி அழுதார். என் பையன் பாத்தா என்ன நினைப்பான் அப்படின்னு என்று வேறு கேட்டுக்கொண்டார். அவரது பையன் இந்த பிக் பாஸ் பார்க்காமல் இருப்பதே நல்லது. சக்தி எந்த நல்ல விஷயமும் செய்ததாக இந்த நிகழ்ச்சியில் வரவே இல்லை. அப்போ ஓவியாவை ஒருமுறை அடிக்க கை ஓங்கினார் ஆனா அது பரவாயில்லை போல இருக்கு. தான் சொன்னதே சரி என்று சாதிப்பார். 4 முறை மக்கள் ஓவியாவுக்கு ஓட்டு போட்டு திருப்பி அனுப்பியும் ஏன் என்று இவருக்கு புரியல. பிக் பாஸிடம் புலம்புகிறார். இவருக்குத் தெரிந்த ஒரே ஆங்கில வார்த்தை ட்ரிகர் என்பதுதான். இதுக்கு நடுவுல நான் ஆம்பள அந்த ஈகோ இருக்கும்ல என்று வேறு சொல்லிக்கொள்வார். அடுத்தவரைப்பற்றி இவருக்குள் இருக்கும் வன்மம் குறைவது போல தெரிந்தால், அணையப்போகும் விளக்கு திரியை வெளியே எடுத்து பிரகாசம் ஆக்குவதுபோல மீண்டும் அந்த வன்மத்தை துளிர்க்கச் செய்வார் காயத்ரி. அவர் சொன்னதை இவரும், இவர் சொன்னதை அவரும் தலையாட்டி பொம்மை போல கேட்டுக்கொள்வார்கள். சக்தி, இவர் தலைவராக இருக்கும்போது இவருக்கு என்னமோ ஜனாதிபதி பதவி கொடுத்தமாதிரி என்ன இருந்தாலும் நான் தலைவர் என்று சொல்லிக்கொள்வார். அந்தப் பதவியால இவங்களுக்கு கொடுக்கப்படும் முட்டையில் கூட அதிகமாக ஒன்று வாங்கிவிட முடியாது என்பது வேறு விசயம்.

காயத்ரி - மகாபாரத சகுனி, இராமாயண கூனி நிசமா என்று தெரியாது. ஆனா இவரைப்பாத்தா நம்பித் தொலைக்க வேண்டி இருக்கிறது. கோள் மூட்டுவது, ஓவியா பற்றி ஒரு வன்மத்தை மனதுள் வைத்திருப்பது, ஓவியாவுக்கு எதிராக சதி செய்வது இதுதான் இவரது வேலை. இவர் நடன இயக்குனர் என்று சொல்கிறார்கள். காலை நடனத்தில் ஓவியா ஆடும்போது கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்திருப்பார். இதுல வேற இவர் ஸ்நேகனுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கிறார். ஓவியாவை விட ஜூலி நன்றாக நடனம் ஆடுகிறார் என்று தீர்ப்பு சொன்னார். ஆனா இவர் ஆடுவதைப்பாத்தா சாணி மிதிக்கற மாதிரித்தான் இருக்கிறது. தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளும் தெரிந்து வைத்திருப்பார் போல. ஆனா சீராக என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாதாம். அப்படி பொய் சொல்லித்தான் சாக்லேட் பவுடர் வாங்கினார். அப்படி எந்த டாக்டர் இருக்கிறார் தெரியவில்லை. கால்சியம் இல்லாவிட்டால் சாக்லேட் பவுடர் வாங்கி சாப்பிடுங்கள் என்று. ஆணவம், மமதை, ஆணவத்திமிர் எல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தால் இப்படித்தான் இருக்கும் என்பது போலவே நடந்துகொள்வார்.

கணேஷ்- உடம்பை நன்றாக வைத்துக்கொண்டிருக்கிறார். முட்டை சாப்பிட்டு உடம்பு பலமாக இருக்கிறது.  எதிலும் ஈடுபாடு காட்டாமல், சாப்பிடுவது, எக்ஸர்சைஸ் செய்வது என்று மட்டுமே இருப்பார். ரொம்பத் தொல்லை இல்லை. ஆனா ஒரு முறை ஓவியா, ஜூலியை கீழ தள்ளி விட்டுட்டாங்கன்னு பொங்கி எழுந்தார். என்ன நடந்ததுன்னு தெரியல. ஜூலி தனது பங்கு முட்டைகளை இவருக்கு தருவதாக சொல்லிட்டாங்களான்னு தெரியல. அடிக்கடி மக்கள் சொன்னா நம்ம தப்பை திருக்கணும். அதுக்குத்தான் வந்திருக்கோம் என்று சொல்லிக்கொள்வார் ஏதோ மனநல மருத்துவமனைக்கு வைத்தியத்திற்காக வந்திருப்பதுபோன்ற தொனியில். சுற்றிலும் இருக்கும் ஆட்கள் அவ்ளவு மோசமாக இருப்பதால் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்னமோ.

வையாபுரி-எல்லாரைப்பற்றியும் நன்றாக புரிந்து வைத்திருப்பவர். அனுபவம். யார் எப்படி என்று இவருக்கு நன்றாகத் தெரியும். ஆனா எல்லாரிடமிருந்தும் கொஞ்சம் தூரமாகவே இருக்கிறார். சில நேரங்களில் கோள் மூட்டுவார். ஆனா இவர் எவ்ளவு கோள் மூட்டினாலும் அது வைக்கப்போரில் தொலைத்த குண்டூசிதான். அந்த அளவுக்கு மற்ற எல்லாரும் கோள் சொல்லி வருகிறார்கள். எனக்கென்னமோ இவர் டார்க் ஹார்ஸ் பிக் பாஸ் பட்டத்துக்கு. ஆனா வாரத்துக்கு ஒருமுறை மனைவி, குழந்தை நினைத்து அழுவார். வீட்டுக்கு போன பிறகு சந்தோசமா இருந்தீங்க அப்படின்னு கேள்வி கேட்டுடக்கூடாதுன்னு நினைக்கிறாரோ என்னமோ. அனுபவஸ்தர் !

ஆரவ்- இருப்பதிலேயே இளவட்டம். ஓவியா ஏன் ஜெயித்து உள்ளே வருகிறார், மக்களிடம் ஓவியாவுக்கு உள்ள செல்வாக்கு பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார். ஓவியாவிடம் ஒருபக்கம்  வார்த்தை விளையாட்டு, செல்ல விளையாட்டுகள் கூட விளையாடுவார். ஆனா யாராவது வந்து விட்டால் ஓவியாவிடம் தொட்டா சிணுங்கி போல ஆகி விடுவார். இவருக்கும் ஓவியாவுக்கு பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் என்னமோ நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனா இவரும் பச்சோந்தி. நம்பிக்கை துரோகம் 2.

ஜூலி - முக்கியமான நபர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பரவலாக அறியப்பட்டவர். அதனால் இந்தப்போட்டிக்கு வந்தார். முதலில் மக்களின் ஆதரவு இவருக்கு இருந்தது. அத்தனை பேரிலும் சினிமா பின்னணி இல்லாதவர். ஆனா இப்போ மக்களின் முன் இவர் வந்து நிற்க முடியுமா என்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் இல்லாவிட்டால் பிரச்சினைகளே இருக்காதோ என்ற அளவுக்கு நினைக்க வைத்தவர். எல்லாரையும் அண்ணா அண்ணா என்று அழைப்பவர். எல்லோரையும் மரியாதையாக அழைப்பார். ஓவியா தவிர. காயத்ரி அக்கா, பிந்து மேடம் என்பார் ஆனா ஓவியா மட்டும் ஓவியா, அவ, இவ அப்படித்தான். எல்லோரிடமும் எல்லோரைப்பற்றியும் பாரபட்சம் இல்லாமல் (சேம் பிளட் போல) கோள் மூட்டுவர். அதற்கு ஏதாவது பட்டம் இருந்தால் இவருக்கு வழங்கலாம். ஓவியா ஒன்று செய்தால் அதை பத்தாக பெருக்கி சொல்வார் இவர். ஓவியா மீது எல்லாருக்கும் கெட்ட அபிப்ராயம் இருக்கிறது என்றால் அதற்கு இவரது பொய்கள்தான் பிரதான காரணம். அவர்கள் ஓவியாவுடன் பிக் பாஸ் முடிந்தவுடன் கூட சண்டை தொடர்வார்களோ என்ற அளவுக்கு பலமாக அஸ்திவாரம் போட்டு வைத்திருக்கிறார்.

ரைசா- "டமில்" கொஞ்சம் கொஞ்சம் வரும். எல்லா நேரமும் மேக் அப் போடுவார். கண்ணாடி முன்னே அமர்ந்திருப்பார். இதற்குப் பிறகும் நேரம் இருந்தால் ஓவியா பற்றி குறை சொல்வார்.  எப்போதும் உதட்டு சாயம் போட்டுக்கொண்டே இருப்பதால் நீளமான வாக்கியங்கள் பேச முடியாது. அதனால் true, true, yes, yes என்பதோடு நிறுத்திக்கொள்வார். அதுவும் முடியாவிட்டால் படுத்து தூங்கி விடுவார்.

ஓவியா- Queen of Love. இவர் இல்லாவிட்டால் பிக் பாஸ் இல்லை என்ற அளவுக்கு இதில் முக்கியமானவர். மனதில் பட்டதை நேரடியாக சொல்பவர். ஒருவர் மீது குற்றம், கோபம் என்றால் அவரிடமே நேராக சொல்பவர். காலையில் எழுந்து இவர் ஆடும் நடனத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் துளியும் பொய்யில்லை. என் பாட்டிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை என்று திருவிளையாடலில் ஒரு வசனம் வரும். அதுபோல இவரது நடனத்துக்கு இந்த தமிழ்நாடே அடிமை. இந்த மொத்த நிகழ்ச்சியில் இவர் ஒருவர் சொல்வதை மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியும். மற்ற யார் சொன்னாலும் ஒரு முறைக்கு 10 முறை விசாரணை செய்யாமல் உண்மை என்று நம்ப முடியாது. இவர் ஒருவருக்கு மட்டும்தான் உள்ளே போகும்போது எந்த அளவுக்கு பெயர், புகழ், அன்பை சம்பாதித்து வைத்திருந்தாரோ அதைவிட பல மடங்கு மக்கள் இப்போது தர தயாராக இருக்கிறார்கள். சோசியல் மீடியாவின் இன்றைய சென்சேஷன் இவர்தான். ஒரு முறை சக்தி போல நடிக்க வேண்டியது வந்தது. இவரால் நடிக்க முடியவில்லை. அதற்கு கமல், நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருந்து விட்டீர்கள். அதனால்தான் உங்களால் நடிக்க முடியவில்லை என்றார். இது இவரது நல்ல மனதுக்கு கிடைத்த பெரிய பாராட்டு. மற்றவர்கள் எந்த அளவுக்கு கூமுட்டைகள் என்றால் (கமல் இப்படி சொன்னதை), கமல் ஓவியாவை திட்டி விட்டார் என்று நினைத்துக்கொள்ளும் அளவுக்கு.

கமல் - இவரின் பொறுப்பு கேள்வி போட்டியாளர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். பதில் பெற வேண்டும். என்ன நினைக்கிறார்கள், என்ன தவறு செய்தார்கள் என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜூலியிடம் மட்டுமே கேள்வி கேட்பார். நியாயமாக நடந்து கொள்வார். சக்தி, காயத்ரி இடம் கேள்விகள் கேட்பார். அதில் கொஞ்சம் குத்தல் இருக்கும். ஆனால் அதில் தனது அறிவுஜீவித்தனத்தை வேண்டுமென்றே கலந்து பேசி அவர்களின் குற்றத்தை நீர்த்துப்போக செய்து விடுவார். ஓவியாவிடம் கொஞ்சம் நியாயமாக நடந்து கொள்வார். ஆனால் ஓவியாவை நீங்கள் தவறு செய்தவுடன் மன்னிப்பு கேட்கிறீர்கள், மனதில் என்ன தோன்றுகிறதோ அந்த உண்மையை சொல்லி விடுவீர்கள் என்பார். ஆனா உடனே மறக்காமல் காயத்ரி பெயரையும் உள்ளே நுழைத்து விடுவார். நமக்குத்தான் உவ்வே என்று வரும். குழந்தையில் இருந்தே கமலுக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் உங்களுக்கு வேறு முகம் கூட இருக்கிறது என்று கமல் சொன்னார். ஆனால் எல்லாருக்குமே பல முகங்கள் இருக்கும் என்பது கமலுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்.
ஓவியாவுக்கு கிடைக்கும் வரவேற்பு இவருக்கு கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றும். அடுத்து வரும் நிகழ்ச்சிகளில் இன்னும் நியாயமாக, கடுமையாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்போம்.

பின் குறிப்பு: (முன்பு வெளியேறியபரணி பற்றி)
ஏற்கனவே நிறைய பேர் வெளிய போயிட்டாங்க. அதுல ரொம்ப முக்கியமானவர் பரணி. இவர் மேல அபாண்டமான பழி போட்டு அவரை தனிமைப்படுத்தி அவராவே வெளியேறிட்டாரு. இவர் தோற்றம் நடவடிக்கை பார்த்தால் கிராம பின்னணி, குறு நகரப் பின்னணி கொண்டவர் போல தெரிகிறது. நியாமானவர். நேராக பேசுபவர். இவர் மீது வெளியே வந்த நமீதா வைத்த குற்றச்சாட்டு ஒருமுறை சமையல் அறையில் இருக்கும்போது எனது கையை தொட்டு விட்டார் என்பதுதான். இவர் கிராம பின்னணி கொண்டிருப்பதால் பெண்களை தொடக்கூடாது என்று தெரியும். வேண்டுமானால் கிராமங்களில் பாருங்கள். வாய்க்காலின் கரைகளில் ஆண்களும், சிறிது தள்ளி பெண்களும் குளித்துக்கொண்டிருப்பார்கள். விரசமாகவே தெரியாது. ஆனா இவங்களுக்கு போலியாக நகரத்தார் போல நடந்துகொள்ளத் தெரியாது. இரண்டுபேர் பேசிக்கொண்டிருந்தால் அவர்களிடம் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் தெரியாது. இதைத்தான் நமீதா சொல்லிக்கொண்டிருந்தார். இப்போவாவது தனது தவறை உணர்ந்தாரா தெரியவில்லை. இந்த வார எபிசோடுல பரணி சுவர் ஏறி குதிக்க போனப்போ தலைவரா நீங்க ஏன் தடுக்கல அப்படின்னு பிந்து மாதவி காயத்ரியை கேட்டப்போ அவர் மிஞ்சி போனா என்ன ஆயிருக்கும் கால்தானே உடைஞ்சிருக்கும் அப்படின்னு சொன்னார். இதுக்காகவே அவரை வெளியேற்றனும் கமல்.

8 comments:

  1. Semmaiya sollitteenga bro. Vaazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே. தொடர்ந்து வருகை தாருங்கள்.
      ட்விட்டரில் இருந்தால் தொடருங்கள்.
      @nellaiseemai

      Delete
  2. Wowwwww! BB pathi Ivalo theliva vera yaaralum solla mudiyathu! Superb!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்கள் பாராட்டு தொடர்ந்து எழுத உற்சாகம் தருகிறது. இன்னொரு கட்டுரை எழுதி இருக்கிறேன் படித்துப்பாருங்கள்.

      Delete
  3. அருமை நன்றாக அலசி ஆராய்ந்து சொல்லியிருக்கிறீஎர்கள்.வாழ்த்துக்கள். அங்கங்கே
    பொருத்தமான படங்களும் போட்டிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்கள் பாராட்டு தொடர்ந்து எழுத உற்சாகம் தருகிறது. இன்னொரு கட்டுரை எழுதி இருக்கிறேன் படித்துப்பாருங்கள். Blogger ல் படங்கள் போட முடியுமா?
      முடியும் எனில் இந்த கட்டுரையை இந்த வாரக்கடைசியில் மாற்ற முயற்சிக்கிறேன்.

      Delete
  4. மக்கள் மனதில் உள்ளதை தெளிவாக சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி. தங்கள் பாராட்டு தொடர்ந்து எழுத உற்சாகம் தருகிறது. இன்னொரு கட்டுரை (கண்டிப்பு காட்டாத கமல்) எழுதி இருக்கிறேன் படித்துப்பாருங்கள்.

      Delete