Monday, October 5, 2015

புலி (2015) விமர்சனம்

புலி இயக்குனர் சிம்புதேவனின் படம். அதில் விஜய் நடித்திருக்கிறார். அவருடன் ஜோடியாக சுருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், இமான் அன்னாச்சி, பிரபு நடித்துள்ளனர். ஸ்ரீதேவி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான வேடம்.

முதலில் சொன்னது போல இது ஒரு சிம்பு தேவனின் படம். பாண்டஸி வகையை சேர்ந்தது. அம்புலிமாமா கதைதான்.  வேதாளம் என்னும் அதி அற்புத சக்தி படைத்த வேதாள இனம் அதன் ஆட்சிக்குட்பட்ட மனிதர்கள். அந்த மனிதர்களை மீட்கப் போராடும் விஜய்-பிரபு கூட்டணி. இதற்க்கு நடுவே அதேதான், ஸ்ருதியுடன் காதல். மண்ணை மீட்கப் போராடுகையில், கடத்தப்பட்ட ஸ்ருதியையும் மீட்கப் போகும் விஜய். வேதாள உலகின் ராணியாக ஸ்ரீதேவி, அதன் தளபதி சுதீப். பழையகால எம் ஜி ஆர் படங்களை ஞாபகப் படுத்தும் கதை, இந்தக் கால டெக்னாலஜி யுடன். வேதாள உலகில் ஸ்ரீதேவியின் மகளாக ஹன்சிகா. ஒருதலையாக விசையை காதலிக்கிறாரா இல்லையா என்று தெரியாத வேடம்.

முதலில் சிம்புதேவன். நல்ல கற்பனைக்கு வேலை உள்ள கதை. நிறைய வித்தியாசமாக யோசித்து  செய்திருக்கிறார்.ஆனால் இன்னும் மெனக் கட்டிருககலாம். சில இடங்களில் ஆச்சர்யப் பட வைக்கிறார். பறக்கும் வேதாளம், பேசும் ஆமை, பேசும் தவளை, கொடூர கருஞ்சிறுத்தை, நீளும் ஸ்ரீதேவியின் கை, சுவரில் நடக்கும் ஸ்ரீதேவி, முழுதாக சாப்பிட பரிமாறப் பட்டிருக்கும் முதலை எல்லாம் நல்ல கற்பனை. ஆனால் இதில் பறக்கும் வேதாளம் சரியாக எடுபடவில்லை. ஏனென்றால் இப்போது எல்லா ஹீரோக்களும் (விஜய் உட்பட) பறந்து பறந்துதான் சண்டை போடுகிறார்கள். வேதாள சக்தியை இன்னும் நன்றாக, வித்தியாசமாக காண்பித்து இருக்கலாம். இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம். படத்தில் காமடி நன்றாக இல்லை. விஜய் ரஜினி போல இயல்பாக காமடி நன்றாக செய்யும் ஹீரோ. விஜய், காமடி செய்யும் தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி எல்லாரும் முயன்றும் காமடி இல்லை. அதி அற்புத மனிதர்கள், பேசும் விலங்குகள் இன்னும் நன்றாக யோசித்திருக்கலாம். எடுத்துக்காட்டாக விஜய்வழி கேட்டு செல்லும் பகுதி. இன்னும் நன்றாக செய்திருக்கலாம். ஆமையிடம் வழி  கேட்கிறார், பிறகு தவளையிடம் வழி  கேட்கிறார், ஒன்று சேரும் பாலம், அவ்ளவுதான். வேதாள கோட்டைக்குள் இருக்கிறார். நடுவில் ஹன்சிகாவை சிருத்தையிடம் இருந்து காப்பாற்றுகிறார். வேதாள உலகில் மருத்துவர் என்று சொல்லி நுழைந்து விடுகிறார். அப்படியே சாதாரணமாக அந்தக் கோட்டைக்குள் சுருதி எங்கே இருக்கிறார் என்பதை உடனே கண்டு பிடித்து விடுகிறார்.

மொத்தத்தில்  கதைக்களம் வித்தியாசமாக இருக்கிறது. சிம்புதேவனின் முத்திரை. ஆனால் அந்த கதையை சொன்ன விதம் மற்றும் கதையில் வரும் சம்பவங்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அதில் சிம்புதேவன் கோட்டை விட்டு விட்டார்.

அடுத்து கதையின் நாயகன் விஜய். இரண்டு வேதங்கள். ஆக்ரோஷ புலி மருதீரனாக, மக்களை மீட்கப் போராடும் வேதாள புலிவீரன். இரண்டு வேடங்களும் நன்கு பொருந்தி இருக்கிறது. இரண்டு வேடங்களும் வாலிப வேடமே. அதனால் இரண்டையும் வித்தியாசப் படுத்த வேண்டிய  கட்டாயமில்லை. மேக் அப்பில் மட்டும் வித்தியாசம். அதுவே போதும். அதுதான் இந்தக் கதைக்கு வேண்டியது. மற்றபடி கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். ஸ்ருதியுடன், ஹன்சிக்கவுடன் டூயட் ஆடி இருக்கிறார். இளமையாகத் தெரிகிறார். ஆட்டம், சண்டை நன்றாகப் போட்டிருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. புலி வேந்தன் இறந்து போகும் இடம் நன்றாக உணர்ச்சிப் பூர்வமாக நடித்து இருக்கிறார்.ஆனால் அந்த இடத்தில் அவர் இறந்து போகும் இடம் அவளவு நன்றாக இல்லை. குழந்தைகள் கழுத்தில் கத்தி வைத்ததும் விஷம் அருந்தி வசனம் பேசி இறந்து விடுகிறார். அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் யோசித்து இயக்குனர் மாற்றி இருக்கலாம். மொத்தத்தில் இந்த கதையை ஒரு மாஸ் ஹீரோவான விஜய் தேர்ந்தெடுத்தது அவர் வித்தியாசமான கதைகளை விரும்ப ஆரம்பித்து இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அவருக்கு ஒரு சபாஷ்.

ஸ்ருதிஹாசன் மிகவும் தாராளம். இயக்குனர் மற்றும் விஜய் இன்னும் கவர்ச்சியை குறைத்து இருக்கலாம். குழந்தைகள் பார்க்கும் மாயாஜால, பாண்டஸி படம் என்று முடிவான உடன் கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனம் தவிர்த்து இருக்கலாம். ஆதி கால மனிதர்கள் அப்படித்தான் உடை அணிந்து இருப்பார்கள் என்று சப்பை காரணம் சொல்ல முடியாது. ஏனென்றால் விஜய் எப்போதும் நன்றாக கவசம் அல்லது தோல் ஆடை அணிந்து இருக்கிறார். ஹன்சிக்கவுக்கும் அதிகம் வேலை இல்லை. முதல் பாதி சுருதி க்கும் இரண்டாவது பாதி ஹன்சிகாவுக்கும் என்று இயக்குனர் பாகம் பிரித்து விட்டார்.

அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது (கவர்ச்சி குறைத்து இருக்கலாம்). பாடல்கள் கேட்கவும், நடனமும் நன்றாக இருக்கிறது. விஜய் நடனம் வழக்கமான சுறு சுறுப்பு.

அடுத்து ஸ்ரீதேவி. முக்கியமான பாத்திரம். மிகவும் நன்றாக செய்து இருக்கிறார். மேக் அப் நிறைய என்று விமர்சனம் படித்தேன். அந்தக் கால அரசி, சற்று வயதானவர் கதைப் படி. எனவே அந்த அளவு மேக் அப் சரிதான். கண்கள் மூலமே நன்றாக நடித்து இருக்கிறார். ஆக்ரோஷமான வேடம். தளபதி சுதீப் முதல் எதிரி என்றாலும் ஸ்ரீதேவி தான் அதிகம் ஸ்கோர் செய்கிறார். படத்தில் நடிப்புக்கு ராங்கிங் செய்தால் ஸ்ரீதேவிதான் முதல் இடம். படத்தை விஜய்க்கு அடுத்து தூக்கி பிடிப்பவர் ஸ்ரீதேவிதான்.

அடுத்து ஆர்ட் டைரக்டர் மற்றும் கம்ப்யூட்டர் டெக்னிசியன். பேசும் ஆமை, பேசும் தவளை, பேசும் பறவை, சேரும் பாலம், சண்டைகள், குள்ள மனிதர்கள் மிகவும் நன்றாக செய்து இருக்கிறார்கள். அந்த ஒற்றைக் கண் அசுரன் தவிர. எது நிஜம் எது கிராபிக்ஸ் என்று தெரிய மிகவும்  முயற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத் தயாரிப்பு மற்றும் தயாரிப்பு செலவு இதை கருத்தில் கொண்டால் கண்டிப்பாக பாராட்டப் படவேண்டிய முயற்சிதான்.

கண்டிப்பாக பாண்டஸி பட விரும்பிகள், காமிக்ஸ் கதை விரும்பிகள், குழந்தைகள் (பாடல் காட்சிகளுக்கு மட்டும் வெளியே கூடிக்கொண்டு சென்று விடுங்கள்) பார்க்க வேண்டிய படம். விஜய் ரசிகர்கள் நன்கு மகிழ்ந்து பார்க்கலாம். அவர்களுக்காகவே பஞ்ச் வசனங்கள் நிறைய வைத்து இருக்கிறார்கள். படம் வெளியாவது தொடர்பான அரசியல் பிரச்சினைகள் கண்டிப்பாக தவிர்த்து இருக்கலாம். விஜய் அரசியல் மறந்து திரைப் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி இதுபோல் வித்தியாசமான கதைக் களங்களில் நடிக்க வேண்டும் என்பதே பொதுவான என்போன்ற திரை ரசிகர்களின் விருப்பம்.

திரை அரங்கு: செந்தில், கோவை. சோபா இருக்கை. ஒலி, ஒளி அமைப்பு நன்றாக இருந்தது. நல்ல சுத்தமான திரை அரங்கம். விஜய் ரசிகர்களில் முற்றுகை. நல்ல பராமரிப்பு, மேலாண்மை.

+ கதைக் களம், ஸ்ரீதேவி, இளமை விஜய், பேசும் விலங்குகள், பாடல், நடனம், சிம்பு தேவன்.
- கவர்ச்சி, கதை சம்பவங்கள், திரைக் கதை, இரட்டை அர்த்த வசனங்கள், காமடி


- நெல்லைசீமை