Saturday, January 21, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் - ஒரு புதிய மாற்றத்திற்கான வித்தா?

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அறிவுஜீவிகளும் இந்தப் போராட்டம்,  என்பது ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்று நடக்கும் போராட்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது இத்தனை ஆண்டு அடங்கி அடங்கியோ அல்லது எவனுக்கு என்ன ஆனா எனக்கென்ன என்றோ ஒதுங்கிச் சென்ற மக்களின் குமுறல். அதனால்தான் ஜல்லிக்கட்டு தவிர மற்ற கேள்விகளும் கேட்கிறார்கள். விவசாயி, விவசாயம், பன்னாட்டு நிறுவங்கள், விலங்கு ஆர்வலர்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதுபோல் மீண்டும் கூட முடியாது என்பதும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் வராது வந்த மாமணிபோல வந்த இந்தப் போராட்டத்தின்மூலமாகவே எல்லாவற்றிக்கும் தீர்வு கிடைத்துவிடாதா என்று நினைக்கிறார்கள். கிடைத்தால் சந்தோசம். ஆனா தொடர்ந்து தெருவில் இறங்கி போராடாமல் அடுத்தடுத்த மாற்றங்கள் வராது. அரசு எந்திரம் இந்தப் போராட்டம் முடிந்தவுடன் மீண்டும் தனது வழக்கமான பணியை செய்ய ஆரம்பித்துவிடும். இப்போ முழித்த கூட்டம் தொடர்ந்து இதுபோல இருந்து கேள்வி கேட்கவேண்டும்.

அதுமட்டும் இல்லாமல் இந்தப் போராட்டத்தின்போது அரசு, காவல்துறை சாதகமான நிலைப்பாடையே எடுத்திருக்கிறது. ஒருவேளை அடுத்து இதுபோல நடந்து அப்போது அரசு, காவல்துறை இந்தமுறை போல இல்லாமல் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் இந்த அளவு எண்ணிக்கையும், உற்சாகமும் இருக்குமா எனபதற்கும், இந்த அவசர சட்டத்திற்கு என்ன ஆகும் என்பதற்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இத்தனை நாள் ஆண்ட, ஆளும் கட்சிகள் கேள்விக்கு உட்பட வேண்டியவை. எதிர்பாராத முறையில் திரு. ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக ஆகி சிறுது நாட்களிலேயே இந்தப் பிரச்சினையை எதிகொள்ள நேர்ந்தாலும் தன்னால் முடிந்த அளவு சரியாக செய்தார் என்றே நினைக்கிறேன். அவரிடம் ஏன் நீங்களாகவே செய்யவில்லை. போராட்டம் நடந்தபிறகு டெல்லி சென்று பிரதமரை சந்தித்தீர்கள் என்று வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் இந்தக் கேள்வியை தொடர்ந்து 6 ஆண்டுகள் ஆண்ட அதிமுக கட்சியையும், அதற்கு முன் ஆண்ட திமுக வையும் அதன் முதல்வர்களையும் கூட கேட்க முடியும்.

இன்னொரு விசயம். அரசியல் கட்சிகளும் இந்த போராட்டம் வெற்றி அடையும்போது தங்களுக்கு சிறு பங்கு கூட கிடைக்காதோ என்ற பயமும் வந்துவிட்டது போலத்தான் இருக்கிறது. அதனால்தான் திமுக ரயில் மறியல், உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தது. அதைவிட முக்கியமாக நடிகர்கள், நடிகர் சங்கமும். ஒரு சில நடிகர்கள் போராட்ட களத்திற்கு நேரிடையாக வந்து தங்கள் ஆதரவை தந்தார்கள். இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது நடிகர்களை திரையரங்கிலேயே ரசித்து முடித்துவிட்டு திரைப்படம் முடிந்ததும் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்.

சில தனி நபர்கள் சேனாதிபதி, கரு. பழனியப்பன், ஆர்ஜே பாலாஜி, சமுத்திரக்கனி போன்ற ஆர்வலர்களும் சிம்பு, மன்சூர் போன்ற நடிகர்களும் குறிப்பிட வேண்டும். இன்னும் நிறையபேர் இருக்கலாம். விடுபட்டவர்கள் பெயர் சொன்னால் முடிந்த அளவு சேர்க்கிறேன்.

இது அனைத்தையும் தாண்டி இந்தப் போராட்டம் வெற்றி பெற காரணிகளாக நான் நினைப்பது.
1. அரசியலை அண்ட விடாதது 
2. ஜாதி, மதம், ஏழை-பணக்காரன் என்ற பிரிவினைகளை உள்ளே விடாதது 
3. ஆண்-பெண்-திருநங்கை என்ற பாலின வித்தியாசங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டது 
4. வன்முறை இல்லாமல் பார்த்துக் கொண்டது (சில இடங்களில் நடந்த ரயில் மறியல் தவிர்த்து, அதை செய்திருக்க வேண்டாம்)
5. தமிழன் என்ற உணர்வில் இணைந்தது 
6. உலகெங்கும் கடல்தாண்டி இருக்கும் தமிழர்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் தங்களால் முடிந்த அளவுக்கு தங்கள் பங்களிப்பை கொடுத்தது
7. அரசும், காவல் துறையும் போராட்டக்காரர்களுக்கு சாதகமான நிலையில் இருந்தது 
8. உணவு, தண்ணீர் அத்தியாவிசயப் பொருட்களை தடையில்லாமல் தொடர்ந்து தந்த தனி மனிதர்கள், தன் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், நிறுவனங்கள்
9. அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டத்தை தொடர்ந்து நேரலை செய்த தொலைக்காட்சி நிறுவங்கள் (குறிப்பாக முதலில் ஆரம்பித்து வைத்த news 7 tamil போன்றவை.
10. தலைவன் இல்லாதது. தலைவன் இருந்தால் இது வழக்கமான போராட்டமாக இருந்திருக்கும்.

இந்த தன்னெழுச்சி போராட்டத்தை ஒரு வாதத்திற்காக கொச்சை படுத்திய ராதா ராஜன் கண்டிக்கப் படவேண்டியவர். PETA அமைப்பு போராட்ட வலிமையை பார்த்து அவர் தங்கள் உறுப்பினர் இல்லை என்கிறது. அது நிஜம்தான்.

இந்தப் போராட்டம் சாத்தித்ததை விட போராட்ட முறை அதிகம் பேசப்படும்.  இந்தப் போராட்டம் உலகம் முழுதும் கவனம் பெற்று நியூ யார்க் டைம்ஸ் கூட கட்டுரை எழுதியது என்றால் போராட்டம் அமைதியாக, வன்முறை இன்றி நடந்தால்தான். இது முழுதும் மாணவர்கள், இளைஞர்களால் நடத்தப்படும் போராட்டம். அவர்களின் அணுகுமுறை, போராடும் உத்தி எல்லாம் புதிதாகவே இருக்கும். சில இடங்களில் இளைஞர்கள் போராட்ட களத்தில் ரத்த தானம் கொடுத்தார்கள். போராட்டமும் ஒரு கொண்டாட்டமாகவே நடக்கிறது. இது எல்லாம் நாம் வழக்கமாக அறிந்து வைத்திருக்கும் முறைகளில் இருந்து புதிது.

ஒரு சிறு கரும்புள்ளி என்றால் அது இதுதான். போராட்டத்தில் ஒரு முதல்வரை ஒருமையில் பெயர் சொல்லியும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமரை கேலிப் பெயர் சொல்லி கோசம் போட்டதும் சரியில்லை. சில இடங்களில் ரயில் மறியல் நடந்து தமிழக ரயில்கள் சில ரத்து செய்யப் பட்டன. இதை தவிர்த்திருக்கலாம்.

PETA அமைப்பு, AWBI, மாடுகளை காட்சிப் பட்டியலில் சேர்த்த ஜெய்ராம் ரமேஷ் எல்லாருமே இந்தப் பிரச்சினையின் பங்குதார்கள். இவர்கள் பெயரை சொல்லாமல் ஜல்லிக்கட்டு தடை பற்றி பேச முடியாது. PETA அமைப்பை தடை செய்ய முடியுமா, சட்டத்தில் இடமிருக்கிறதா தெரியவில்லை. இப்போதைக்கு தமிழ்நாட்டில் மட்டும் காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க முடியும். ஆனால் இது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் சட்டமானால் மீண்டும் நீதிமன்ற விவாதத்திற்கு வராது என்கிறார்கள். சட்ட வல்லுநர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசு வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது நாங்கள் அவசர சட்டம் கொண்டு வரமுடியாது. அப்படிக் கொண்டுவந்தாலும் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது தள்ளுபடி செய்யப் படலாம் என்கிறது. அதுமட்டுமில்லாமல் கொண்டுவரும் சட்டம் இந்திய முழுமைக்கும் இருக்கும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டுமானதாக இருக்கும் என்கிறது. இதுபற்றி சட்ட வல்லுநர்கள் கூட மாறுபட்ட கருத்துக்கள் சொல்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் மட்டுமே சட்ட மேதைகளாக வலம் வருபவர்களும் மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கிறார்கள். திரு. மார்க்கண்டேய கட்ஜு தமிழ் நாடு சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவந்தால் அது நிரந்தரமானதாக இருக்கும். நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். என்ன நடக்கும் பார்க்கலாம்?

இதுவரை எழுதியதெல்லாம் எனது மனதில் தோன்றிய எண்ணங்கள்.  ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம், வரலாறு என்ன இதெல்லாம் முடிந்தால் அடுத்த பதிவில் எழுதுகிறேன். இதை எழுத நிறைய வாசிக்க வேண்டும். எழுதுகிறேன்.

நன்றி